எட்டயபுரம் அருகே அரசுப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழாவில் மாட்டு வண்டியில் வந்து அசத்திய தலைமை ஆசிரியர்!!
எட்டயபுரம் அருகில் உள்ள இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர்களை பள்ளிக்கு மாட்டுவண்டியில் அழைத்து வந்து அசத்தினார்.

எட்டயபுரம் அருகில் உள்ள இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர்களை பள்ளிக்கு மாட்டுவண்டியில் அழைத்து வந்து அசத்தினார்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி சமத்துவ பொங்கல் என்ற நிகழ்வும் நடந்துவருகிறது. இந்த ஆண்டும் தமிழகத்தின் பல இடங்களிலும் வேறுபாடின்றி அனைத்து துறைகளிலும் சமத்துவ பொங்கலை கொண்டாடினர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகில் உள்ள இராமனூத்து கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளியிலும் சமத்துவப் பொங்கல் நடந்தது. நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் இப்ராஹிம்(வேம்பாரைச் சார்ந்தவர்) பள்ளியின் மாணவ மாணவியரை மாட்டு வண்டி மூலம் அவரே ஓட்டிக்கொண்டு பள்ளிக்கு அழைத்து வந்து புதுமையுடன் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார்.
பள்ளியில் நடந்த சமத்துவ விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவி வீரம்மாள் தலைமை வகித்தார். உதவி ஆசிரியை இந்திரா அனைவரையும் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் இப்ராஹிம் மாணவமாணவியருக்கு பொங்கல் பொருட்கள் வழங்கியதுடன் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.நிறைவில் பொங்கல் பாடல்கள் மாணவர்களின் கலைநிகழ்ச்சியுடன் சமத்துவ பொங்கல் விழா நடந்து முடிந்தது